கோவையில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்
கோவையில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்
கோவை மாநகரில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த கேமராக்கள் கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அபராதவிதிப்பு உரிய ஆவணங்களுடன் வாகன உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் கூறுகையில், கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும் விபத்துக்களை தடுப்பதற்காகவும் கோவை மாநகர காவல் துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகரில் உள்ள அவிநாசி சாலை சத்தியமங்கலம் சாலை பாலக்காடு சாலை ஆகிய மூன்று முக்கியமான சாலைகளில் 3D ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை வேகத்தை நாம் கண்டறியலாம். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு செய்ய முடியும். எனவே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதித்த இ- செலான் அனுப்பப்படும். கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட மாநகர காவல் துறையினர் உடன் இருந்தனர்.