30 நிமிடங்களாக இதயத்துடிப்பு இல்லாத நிலையில் நோயாளிக்கு மறுவாழ்வு அளித்து க.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் சாதனை
30 நிமிடங்களாக இதயத்துடிப்பு இல்லாத நிலையில் நோயாளிக்கு மறுவாழ்வு அளித்து க.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் சாதனை
கோவை செப் 29,கோவையை சார்ந்த வேல்முருகன் (வயது 54) என்ற நபர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு நடுரோட்டில் மயங்கி விழுந்துவிட்டார். அருகிலிருந்தோர் அவரது மார்பை அழுத்தி முதலுதவி அளித்து கேஎம்சிஹெச் மருத்துவனைக்கு அழைத்து வந்தனர். அதற்குள் 15 நிமிடம் ஆகிவிட்டது. அவர் சுயநினைவு இழந்திருந்ததால் நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறிக்க இயலவில்லை. மரு.பாலகுமாரன்,மரு ரமேஷ், மரு. குணசீலன்,மரு. சிவகுமார், மரு.திலீபன் மற்றும் மரு.யுவராஜ் ஆகியோர் கொண்ட கேஎம்சிஹெச் மருத்துவக் குழுவினர் உடனடியாக செயல்பட்டு நோயாளியின் மார்பை அழுத்தி சிபிஆர் சிகிச்சை அளித்தனர். 15 நிமிடத்தில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. எக்மோ கருவி உதவியுடன் இரத்த அழுத்தம் சீராகப் பராமரிக்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் நோயாளியின் உடல்நிலை மேம்பட்டு சுயநினைவு திரும்பியது. மூன்று நாட்களுக்குப் பிறகு எக்மோ கருவி அகற்றப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி இதுகுறித்து கூறுகையில் ”சிபிஆர் என்ற உயிர்காக்கும் முதலுதவியின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சி விளக்குகிறது. அவசர சிகிச்சைப் பிரிவு, கேத் லேப், எக்மோ முதலான நோயாளிகளின் இன்னுயிரைக் காத்திடத் தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர்களையும் கேஎம்சிஹெச் மருத்துவமனை பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரைப் பாராட்டினார்