கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்ததாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி எனும் கண்டனப் பொதுக் கூட்டம் மற்றும் பேரணி இன்று மாலை நடைபெற்றது.
காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டனப் பேரணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கண்டன பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், முதலமைச்சர் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.
மேலும், கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும், காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த தவறியதாகவும் குற்றம்சாட்டினர்.
அண்ணாமலை பேசியதாவது, “கோவையில் கார் குண்டுவெடிப்பு நடத்துவதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒன்று கூடி திட்டம் தீட்டியுள்ளதாக என்.ஐ.ஏ வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல் இலக்காக பொதுமக்கள் அதிகம் கூடும் துணிக்கடையும், அடுத்த ஆறு நாட்களில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்க திட்டம் திட்டி உள்ளதாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் இந்த செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணித்து தடுக்கவில்லை. சிலிண்டர் மற்றும் வெடிபொருட்களை காரில் கொண்டு செல்லும்போது வெடித்துள்ளது. இதனை முதலமைச்சர் விபத்து என்றே கூறி வருகிறார்.
1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்த பாஷாவின் உடலுக்கு சீமான் மற்றும் தனியரசு ஆகியோர் அஞ்சலி செலுத்தி வாக்கு அரசியலை செய்து வருகின்றனர். திருமாவளவன் அவர்களும் இதே போன்ற வாக்கு அரசியலை செய்கிறார். மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
குண்டுவெடிப்பு குற்றவாளியின் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் காவல்துறையினர் பாஜகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் வழங்குவதில்லை. இந்த பேரணிக்கு வரும் பாஜக தலைவர்களை கூட வீட்டு காவலில் வைக்கின்றனர்.
திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து தான் செய்யப்படுகிறது. இது இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் திருப்பி விடும் செயல் ஆகும். எனவே, மாநில அரசு தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் பயங்கரவாதத்தை கண்காணித்து தடுப்பதிலும் தீவிரவாதிகளை தண்டிப்பதிலும் உரிய வகையில் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.
பொதுக் கூட்டத்தையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
—