சர்வதேச அளவில் நடந்த கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
ஐரோப்பா கண்டம் ஆஸ்த்திரியாவில் நடைபெற்ற 7 வது சர்வதேச கோஜு ரியூ கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 வது சர்வதேச கோஜு ரியூ கராத்தே போட்டிகள் ஐரோப்பா கண்டம் ஆஸ்த்திரிய நாட்டில் கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்து கோள்ள 26 நாடுகளை சேர்ந்த 1200 வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் 20 பேர் கலந்துகொண்டனர். மேலும் இந்த போட்டிகளில் தமிழ்நாடு கோஜு ரியூ அமைப்பின் தலைவர் சென்சாய் பார்த்தீபன் மற்றும் செயலாளர் பிரமோஷ் ஆகியோர் தலைமையில் கோவையை சேர்ந்த 6 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மேலும் சர்வதேச தரப்பட்டியலில் குமித்தே பிரிவில் 5 வது இடத்தை பிடித்தனர். கோவையை சேர்ந்த கைலாஷ் என்ற மாணவர், 16 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் டீம் கட்டாவில் வெண்கல பதக்கமும், சீனியர் குமித்தே பிரிவில், தர்ணீஷ் 84கிலோ எடை பிரிவில், வெண்கல பதக்கமும், 21 வயதிற்குட்பட்டோருக்கான குமித்தே பிரிவில் வெண்கல பதக்கம், பெண்கள் பிரிவில் டீம்கத்தா பிரிவில் மகாகவுரி வெண்கல பதக்கம், சீனியர் குமித்தே பிரிவில் 84 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம், ஆகாஷ் 21 வயதிற்குட்பட்டோருக்கான குமித்தே பிரிவில் தரவரிசை பட்டியலில் 5 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று, கோவை திரும்பிய வீரர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இன்று கோவை விமான நிலையத்தில் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சர்வதேச அளவில் சாதனைகள் படைத்து நாடு திரும்பிய இந்திய அணியின் தமிழக வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்தில் திரண்டு வந்திருந்த பெற்றோர்கள், கராத்தே ஆசிரியர்கள் பொதுமக்கள் வெற்றி பெற்றவர்களுக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி, பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.