அரசு மருத்துவக் கல்லூரியில் ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் புதிய மருத்துவ படிப்பு துவக்கம்.
அரசு மருத்துவக் கல்லூரியில் ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் புதிய மருத்துவ படிப்பு துவக்கம்.
கோவை அக்டோபர் 6-
கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டு முதல் ‘ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ்’ எனும் புதிய துணை மருத்துவ படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், டயாலிசிஸ் டெக்னீசியன், லேப்-டெக்னீசியன், மருந்தாளுநர், அறுவை சிகிச்சை அரங்கு தொழில்நுட்பநர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டு முதல் புற்றுநோய் பிரிவான, ‘ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ்’ எனும் புதிய துணை மருத்துவ படிப்பு துவக்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லுாரி டீன் நிர்மலா கூறுகையில், ”கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, கோவை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மண்டலமாக செயல்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் புற்றுநோய் பிரிவான, ‘ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ்’ எனும் புதிய துணை மருத்துவ படிப்பு துவக்கப்படும்.
இப்படிப்புக்கு, 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்றாண்டு படிப்பு, ஓராண்டு பயிற்சி என, நான்காண்டு பட்டப்படிப்பு. இதன் வாயிலாக புற்றுநோய் மையத்துக்கு கூடுதலாக ரேடியோ தெரபி டெக்னாலிஜிஸ் வல்லுநர்கள் கிடைப்பதோடு, கூடுதலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்,” என்றார்.