கோவையில் 70 கிலோ குட்கா பறிமுதல்
எங்கெல்லாம் குட்கா புகையிலை சப்ளை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஜி.ஓ. காலனி:
குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கஞ்சா, குட்கா விற்பனையை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகளும், குட்கா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று மணிகட்டி பொட்டல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த 70 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.42 ஆயிரம் பணமும் சிக்கியது.
இதை தொடர்ந்து 3 பேரையும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிடிபட்டவர்கள் பனச்ச மூட்டை சேர்ந்த அபு முகமது (வயது 44), மணிக்கட்டி பொட்டலை சேர்ந்த பெரியசாமி (28), குஞ்சன்விளையைச் சேர்ந்த சுதாகர் (29) என்பது தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அபு முகமது, பெரியசாமி, சுதாகர், ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் இவர்கள் கேரளாவில் இருந்து குட்கா புகையிலை கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வேறு எங்கெல்லாம் குட்கா புகையிலை சப்ளை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.