கோவை மாவட்டத்திற்கு புதிய டி.இ.ஓ.க்கள் நியமனம்.
கோவை மாவட்டத்திற்கு புதிய டி.இ.ஓ.க்கள் நியமனம்.
கோவை அக்டோபர் 3-
கோவை மாவட்டத்திற்கு, இரு தொடக்க கல்வி, இடைநிலை கல்வி உட்பட, ஐந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி கல்வித்துறையில் நிர்வாக பணிகளில் உள்ள மந்தநிலை சீராக்கவும், ஒரே பதவியில் குவியும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும், சில மாற்றங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, 55 இடைநிலைக்கல்வி மாவட்ட அலுவலர்கள், 58 தொடக்க கல்விக்கான மாவட்ட அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர்கள் என, 152 அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
கோவை மாவட்டத்திற்கு, கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு இரு தொடக்க கல்வி அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி தொடக்க கல்வி அலுவலராக, ஏற்கனவே கோவையில் நகர் மாவட்ட கல்வி அலுவலராக (டி.இ.ஓ.,) பணியாற்றிய, வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக, புனிதா அந்தோணியம்மாள் மாறுதல் பெற்றுள்ளார்.
இவர் குன்னுார் டி.இ.ஓ.,வாக பணியாற்றியவர்.கோவை மாவட்டத்திற்கு, இடைநிலை கல்விக்கான, டி.இ.ஓ., வாக, பாண்டியராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகராட்சி கல்வி அலுவலராக பணியாற்றியவர்.பொள்ளாச்சி இடைநிலை டி.இ.ஓ., வாக கீதா பொறுப்பேற்றுள்ளார். இவர், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் டி.இ.ஓ.,வாக பணியாற்றியவர்.இரு இடைநிலை டி.இ.ஓ.,க்களும், ஏற்கனவே
கோவை மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல், தனியார் பள்ளிகளுக்கான டி.இ.ஓ.,வாக முருகேஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காளப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி, பதவி உயர்வு மூலம் டி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றுள்ளார்.