மாட்டு இறைச்சி கடையை மூடச் சொல்லி தகராறு இந்து முன்னணியை சேர்ந்த 3 பேர் கைது
மாட்டு இறைச்சி கடையை மூடச் சொல்லி தகராறு இந்து முன்னணியை சேர்ந்த 3 பேர் கைது
கோவை அக்டோபர் 5 –
கோவை பிரஸ் காலனி பி.எஸ்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சிக்கந்தர்(வயது32). இவர் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை முகமது சிக்கந்தர் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்தார். மதியம் முகமது சிக்கந்தர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கடையில், வேலைபார்க்கும் ஒரு வாலிபர் மட்டுமே இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க 3 பேர் கடைக்கு வந்தனர்.
அவர்கள் கடையில் இருந்த வாலிபரிடம் இன்று ஏன் கடையை திறந்து வைத்துள்ளாய். கடையை மூடி விட்டு வீட்டிற்கு செல் என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்
அதற்கு வாலிபர் இன்னும் சிறிது நேரத்தில் கடையை பூட்டி விடுவோம் என்றார். ஆனால் 3 பேரும் அவர் சொல்வதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் கடையின் ஷட்டரை பிடித்து கீழே இழுத்தனர். இதனால் பயந்து போன அந்த வாலிபர் கடையில் இருந்து வெளியில் ஓடி வந்தார்.
பின்னர் இதுகுறித்து கடையின் உரிமையாளரான முகமது சிக்கந்தருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கடையில் 3 பேர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை போலீசார் பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், மாட்டு இறைச்சி கடையை மூட சொல்லி தகராறு செய்தது இந்து முன்னணி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொது செயலாளர் சண்முகம்(40), ஜோதிபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வினோத்(32), ஜோதிபுரம் ஒன்றிய தலைவர் முருகன்(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் நேற்று மதுகுடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சென்று மாட்டு இறைச்சி கடையில் இருந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை மூட சொல்லியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.