கோரிக்கையை அரசு ஏற்கும் வரை மின் கட்டணம் செலுத்தாமல் போராடுவோம் திருப்பூர் கோவை விசைத்தறியாளர்கள் உறுதி.
கோரிக்கையை அரசு ஏற்கும் வரை மின் கட்டணம் செலுத்தாமல் போராடுவோம் திருப்பூர் கோவை விசைத்தறியாளர்கள் உறுதி.
கோவை.டிசம்பர், 30-
தமிழகத்தில் விசைத்தறி கூடங்களுக்கான மின் கட்டண உயர்வைஅரசு திரும்பப் பெறும் வரை மின்கட்டணம் செலுத்தாமல் போராடுவோம் என விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மின் கட்டண உயர்வால் சமாளிக்க முடியாத நெருக்கடி நிலைக்கு விசைத்தறித் தொழில் தள்ளப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
சாதா விசைத்தறிக்கு ‘3ஏ2’-க்கு மிக அபரிமிதமாக உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை, தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 80 நாட்களுக்கும் மேலாக, மின் கட்டணம் செலுத்தாமல் போராடி வருகிறோம். தமிழக மின்துறை அமைச்சர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், மின்வாரியத் தலைவர் உட்பட அனைவரையும் நேரில் பல முறை சந்தித்து மனு அளித்தும்,
இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. சாதா விசைத்தறி ‘3ஏ2’-க்கு 750 யூனிட்வரை உபயோகிக்கும்விசைத் தறியாளர்களுக்கு இதுவரை நடைமுறையில் கட்டணம் எதுவும் இல்லாமல் இருந்தது. இதேநடைமுறையை வரும்காலங்களில் தொடர வேண்டும். சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.
கடந்த செப்டம்பர் மாதம் 10-ம்தேதிமுதல் சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டண அளவில் கணக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தை செலுத்தாமல் சாதா விசைத்தறியாளர்கள் போராடி வருகின்றனர்.
தற்போது அனைத்து சிலாப்புகளுக்கும் 30 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதும், ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதும், கூலிக்குநெசவு செய்யும் விசைத்தறி தொழிலை முழுமையாக அழித்துவிடும். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். ‘3ஏ2’-க்கு உயர்த்திய 30 சதவீத மின் கட்டணத்தையும்,ஆண்டுக்கு 6 சதவீத மின்கட்டண உயர்வையும் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும், என்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கப் பொருளாளர் பூபதி கூறியதாவது: மின் கட்டண உயர்வால், ஒவ்வொரு விசைத்தறிக் கூடங்களிலும் ரூ.7ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம்வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த நேரிடும். இது, எங்களுக்குகூடுதல் சுமையாகும். கரோனா, நிலையில்லாத நூல் விலையால் விசைத்தறித் தொழில் திண்டாடிவருகிறது.
சோமனூர், அவிநாசி, சூலூர், காரணம்பேட்டை, சாமளாபுரம், பல்லடம், ஒண்டிப்புதூர் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விசைத்தறியாளர்கள் மின் கட்டணம் செலுத்தாமல் போராடி வருகிறோம். சோமனூர் பகுதியில் மட்டும் தற்போதைய கணக்கெடுப்பு வரை, ரூ.3.50 கோடி மின்கட்டண பாக்கி உள்ளது. அதேபோல மற்ற பகுதிகளிலும் பல கோடி ரூபாய் மின் கட்டணம் தேங்கி உள்ளது.
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்று, விசைத்தறித் தொழிலை காப்பாற்ற வேண்டும், என்றார்.