கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்குகள் முடக்கம் போலீசார் நடவடிக்கை.
கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்குகள் முடக்கம் போலீசார் நடவடிக்கை.
கோவை டிசம்பர் 1-
பெரியநாயக்கன்பாளையம் சரகத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 26 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதை பொருள்களின் நடமாட்டம், பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, கோவை மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கஞ்சா, புகையிலை பொருட்கள், போதை மாத்திரை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் சரகத்துக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், தடாகம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக, 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களில், 26 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., நமச்சிவாயம் கூறியதாவது:கடந்த மூன்று மாதங்களில் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில், 4 ‘டன்’ எடையுள்ள புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
லாட்டரி விற்பனையில் கைது செய்யப்பட்ட ஒரு நபரின் வங்கி கணக்கில் இருந்த, 22 லட்ச ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 10 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட நபர்களில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.நடப்பாண்டு பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக, 17 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க, 25 இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. புதிதாக, 70 கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.
மாங்கரை, ஆனைகட்டி சோதனை சாவடிகளில் போலீசார், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கேரளா-தமிழக மாநிலங்களுக்கு இடையே செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் கண்காணிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதான வழியை தவிர்த்து, பிற வழிகளில் கேரளாவுக்குள் நுழையும் நபர்களை கண்காணிக்க, தடுத்து நிறுத்த சட்டத்துக்கு புறம்பான செயல்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா, லாட்டரி, சூதாட்டத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, பொது மக்களுக்கு தகவல் தெரிந்தால், 80725 19474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.