சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் இருந்து கோவைக்கு நடைப்பயணம் துவங்கிய விவசாயிகள்.
சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் இருந்து கோவைக்கு நடைப்பயணம் துவங்கிய விவசாயிகள்.
கோவை டிசம்பர் 5-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுக்காக்களில் உள்ள 6 ஊராட்சிகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் தொழிற் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக நிலங்களை கையகப்படுத்த 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணையும் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
நிலங்களை கையகப்படுத்த தற்போது அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அன்னூரில் தொழிற் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் நமது நிலம் நமதே என்ற அமைப்பை துவங்கி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு என தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று காலை 6 மணிக்கு நமது நிலம் நமதே போராட்டக் குழு தலைவர் ரவிக்குமார், செயலாளர் ராஜா, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் பெண்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து அன்னூர் மன்னீஸ்வர சுவாமி திருக்கோவில் அருகே பாத விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து கோவைக்கு தங்களது நடை பயணத்தை துவக்கியுள்ளனர்.
இந்த நடை பயணமானது கரியாம்பாளையம், கணேசபுரம், கோவில்பாளையம், சரவணம்பட்டி வழியாக சென்று இறுதியாக கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சுமார் 34 கிமீ தூரத்தில் முடிவடைய உள்ளது.
பின்னர், நடைபயணம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் புலியகுளம் விநாயகரிம் மனு அளிக்க உள்ளனர். இந்த மனுவில் நாங்கள் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் விவசாய மக்கள். எங்கள் பகுதிகளை சிட்கோ அமைக்கும் நோக்கில் அரசு எங்களது நிலங்களை எங்களின் அனுமதி இல்லாமல் பிடுங்கி எடுக்க அரசாணை பிறப்பித்துள்ளது.
நாங்கள் அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே, நீங்கள் தான் எங்களை காப்பாற்றி இந்த மீளா துயரத்தில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனுவை கோவையில் பிரசித்தி பெற்ற புலியகுளம் விநாயகரிடம் அளிக்க உள்ளதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.