கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு கைதானவர்கள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை.
கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு கைதானவர்கள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை.
கோவை அக்டோபர் 5 –
கோவையில் கடந்த மாதம் 22-ந் தேதி கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், குனியமுத்தூர் பகுதிகளில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அரங்கேறியது. இதையடுத்து கோவையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் தனிப்படை அமைத்து, பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கைதானவர்களை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட துடியலூர் ரெயில்வே ஸ்டேஷன் மற்றும் நேருவீதியை சேர்ந்த முஜிபுர்ரகுமான், ரபிக் ஆகிய 2 பேரின் வீடுகளுக்கு நேற்று கோவை மாநகர போலீசார் ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர்.
அவர்கள் 2 பேரின் வீடுகளுக்குள்ளும் சென்று ஒவ்வொரு அறையாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களை வெளியில் அனுமதிக்கவில்லை. சோதனையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே மேட்டுப்பாளையத்தில் பிளைவுட் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார்(வயது53). மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் சச்சின்(45). இவர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் பிளைவுட் கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கடையின் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் குண்டை கடையின் குடோனில் வீசினர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி தலைமையில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன், திலக் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வ செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பிளைவுட் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம்
பகுதியை சேர்ந்த நஜீர்ஹகமத்(30), ஷேக்பரீத்(30), முகமதுதவ்பிக்(25), வாகித் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்தனர். நீதிபதி 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.