சாலையில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள். தனியார் விற்பனை பிரதிநிதி உட்பட 4 பேர் கைது.
சாலையில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள். தனியார் விற்பனை பிரதிநிதி உட்பட 4 பேர் கைது.
கோவை அக்டோபர் 3-
கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் மாரியப்பன். இவர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவை அவர் பார்த்தார்.
அப்போது நள்ளிரவு வேளையில் 6 வாலிபர்கள் ஒன்று கூடி நடுரோட்டில் நின்று கொண்டு பட்டாக்கத்தியால் கேக்கினை வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர், சம்பவம் நடந்த இடம் எது என்பதை அறிய வீடியோவை உற்று பார்த்தார். அப்போது சம்பவம் நடந்த இடம் இடையர்வீதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் போலீசாருடன் ஜீப்பில் இடையர்வீதி பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வாலிபர்கள் கோஷம் எழுப்பியபடி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும், வாலிபர்கள் பட்டாக்கத்தியை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக போலீசார் ஜீப்பில் இருந்து இறங்கி துரத்தி சென்று 4 வாலிபர்களை சுற்றி வளைத்தனர். மற்ற 2 பேர் தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் 4 வாலிபர்களையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், செல்வபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் அசோக்குமார்(30) என்பவருக்கு நேற்று பிறந்தநாள். இதனை கொண்டாட அவரது நண்பர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அசோக்குமார் மற்றும் அவரது நண்பர்களான செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரவிந்தகுமார்(27), வடவள்ளி பி.என்.புதூரை சேர்ந்த கூலிதொழிலாளி தினேஷ்குமார்(23), காந்தி பார்க்கை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருடன் இடையர்வீதி பகுதிக்கு வந்தனர். அங்கு அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிறந்த நாள் கேக்கினை பட்டாகத்தியை வைத்து வெட்டியுள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்ததும், பின்னர் சமூக வலைதளத்தில் பரவவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அசோக்குமார், அவரது நண்பர்கள் அரவிந்த்குமார், தினேஷ்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.