ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் சமூக ஆர்வலர்
ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் சமூக ஆர்வலர்*
கடலூர் மாவட்டம் கிள்ளை பகுதியைச் சார்ந்தவர் சமூக ஆர்வலர் பூராசாமி இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனி ஒரு மனிதனாக நின்று ஏழை எளிய மக்களுக்கு சமூகப் பணியை செய்து வருகிறார். மேலும் ஒருவேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட பட்டமேற்படிப்புகளை முடித்துவிட்டு, தன்னை முழுமையாக ஏழை எளிய மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார். இவர் தனியார் துறையில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வரும் நிலையில், ஓய்வான நேரங்களில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் வாழ வழியின்றி துன்பத்திலும் துயரத்திலும் தினசரி ஒரு வேளை உணவிற்காக பட்டினியோடு போராடும் எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். இவரின் தொடர் முயற்சியால் வசிக்க வீடு இல்லாமல், எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி நாடோடிகளாக வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான ஏழை மக்களை அடையாளங்கண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளார். மேலும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, முதல் தலைமுறையாக நூற்றுக்கணக்கான குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். மேலும் பெற்றோர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட தொழில் சார்ந்த உபகரணங்களை வழங்கி அவர்களின் வாழ்வில் இருளை நீக்கி வெளிச்சத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார், சமூக ஆர்வலர் பூராசாமி. அதுமட்டுமல்லாமல் இவரால் புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத்தந்து, மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளர். மேலும் தமிழகத்திலுள்ள சில ஆதரவற்ற ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளைசெய்து வருகிறார். மருத்துவம் பார்க்க வசதியில்லாமல் தினசரி மரண வேதனையில் துடிப்பவர்களுக்கு. மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்து வருகிறார். கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார். உண்ண உணவும், உடுத்த உடையும், உறங்க இடமும் இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அரசின் உதவியோடு இலவச மனைப் பட்டா, குடும்ப அட்டை, மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்டவை இவருடைய தொடர் முயற்சியால், நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார். நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட விதை பந்துகளை நட்டுள்ளார். இன்று இவரால் பல குடும்பங்கள் வாழ்கின்றன. இவரின் சமூக பணியை அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.