கோவைக்கு 120 புதிய பஸ்கள் வருகை.
கோவைக்கு 120 புதிய பஸ்கள் வருகை.
கோவை டிசம்பர் 2-
தமிழக அரசு ரூ.420 கோடியில் புதிதாக ஆயிரம் பஸ்கள் வாங்கியுள்ளது. அதில் கோவைக்கு 120 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பஸ்கள் ஒரு சில நாட்களில் கோவைக்கு வந்து இயங்க தொடங்க உள்ளது.
தமிழகத்தின் 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள காலாவதியான பஸ்களை ஈடுசெய்யவும், காற்று மாசுபாட்டை குறைக்கும் பி.எஸ்.6 ரக பஸ்கள் பயன்படுத்தும் வகையிலும் புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
அதன்படி 1000 பஸ்கள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. ஒரு பஸ்சுக்கு தலா 42 லட்சம் ரூபாய் என மதிப்பீடு செய்து ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எட்டு லட்சம் கி.மீ தொலைவு வரை இயக்கப்பட்டு பயனற்றவை பட்டியலில் இடம் பெற்ற பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. கோவை மண்டலத்திற்கு 120 பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை நேற்று தமிழக முதல்-அமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்.
கோவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பஸ்கள் ஒரிரு தினங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தினர் கூறுகையில், அரசு வழங்கிய 120 பஸ்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும். புதிய பஸ்களில் 60 சதவீதம் டவுன் பஸ்களாகவும், 40 சதவீதம் மப்சல் பஸ்களாகவும் இயக்கப்படும் என்றனர்.