பள்ளத்தில் கோழிக்கழிவுகளை கொட்டிய கோழி கடைக்கு சீல் வைப்பு.
பள்ளத்தில் கோழிக்கழிவுகளை கொட்டிய கோழி கடைக்கு சீல் வைப்பு.
கோவை நவம்பர் 22-
தொண்டாமுத்தூரில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கோழிக்கழிவுகளை பள்ளத்தில் கொட்டிய கோழிக்கடையை பூட்டி, பேரூராட்சி நிர்வாகத்தினர், சீல் வைத்தனர்.தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சுமார், 20 இறைச்சி கடைகள் உள்ளன.
இந்த கடைகளில், தேங்கும் கோழி கழிவுகளை, கடை உரிமையாளர்கள், குபேரபுரி பள்ளம், புத்தூர் பள்ளம், கீழ் சித்திரைசாவடி வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர்.
இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.கோழி கழிவு கொட்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட, பெரியார் நகர், புத்தூர் பள்ளத்தில், நேற்றுமுன்தினம் இரவு, கோழிக்கழிவுகளை கொட்டிய கடை உரிமையாளரை, அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.
தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், பள்ளத்தில் கோழிக்கழிவு கொட்ட முயன்றதால், ‘தியா’ என்ற கோழி கடையை பூட்டி, தொண்டாமுத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் குமார், ‘சீல்’ வைத்தார்.
இனி, பொது இடங்களில், கோழிக்கழிவு கொட்டும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.