குற்றச்செயல்களில் ஈடுபாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.பேட்டி
இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது நடவடிக்கை பாயும். நீலாம்பூர் புறக்காவல் நிலையத்தில் திறந்து வைத்து எஸ்.பி. பத்ரி நாராயணன் பேட்டி.
கோவை நவம்பர் 25-
கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்கா கவும், கோவை மாநகருக்குள் நுழைவதற்கான முக்கியமான எல்லைப்பகுதி என்பதாலும் இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக புற காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குற்றங்கள் குறைப்பதற்கு பயன் அளிப்பதாக இருக்கும்.
இதுவரை கோவை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 220 பவுன் நகைகள் குற்றவாளி களிடம் இருந்து மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் குற்றவாளிகள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கும். குற்றங்களை செய்துவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. கோவையில் பொது மக்களை மிரட்டி பணம் பறித்தால் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக 150 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 120 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கோவையில் இதுவரை 570 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 520 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.