ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவு குளி ரில் அடங்கும் பொதுமக்கள்.
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவு குளி ரில் அடங்கும் பொதுமக்கள்.
நீலகிரி நவம்பர் 23-
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் நீா்ப்பனி தாக்கம் அதிகமாக காணப்படும். டிசம்பா் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் உறைபனி நிலவுவது வழக்கம். இந்த சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள புல் மைதானங்கள், காய்கறி செடிகள் மற்றும் தேயிலை செடிகளில் உறைபனி கொட்டி கிடக்கும். தேயிலை, மலைகாய்கறிகள் விவசாயமும் பாதிக்கும். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கடந்த 3 நாட்களாக நீா்ப்பனி பொழிவால் கடுங்குளிா் நிலவி வந்தது.
ஊட்டியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவில், மலைப்பகுதி முழுவதும் கடும் குளிா் வாட்டியது. இதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் வகையில் ஊட்டியில் உறைபனி தாக்கம் இருந்தது.
அப்பர் பவானி, அவலாஞ்சி, தலைகுந்தா, கிளைன்மார்கன், பைக்காரா, எச்.பி.எப், சூட்டிங்மட்டம் மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது. இதனால் புற்கள், கார்கள், செடிகள் ஆகியவற்றின் மீது வெள்ளை கம்பளம் விரித்தாற் போன்று உறைபனி படர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி படகு இல்லம், தலைக்குந்தா, கோல்ப் கிளப் உள்ளிட்ட இடங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
காலை 8 மணி வரை குளிரின் தாக்கம் காணப்பட்டது. இதனால் காலையில் பணிக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் விறகுகளை எரித்து குளிர் காய்ந்தனர். பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் நீடிக்கிறது. உறைபனியில் இருந்து காக்க விவசாயிகள் தென்னை ஓலைகள், தாவை எனப்படும் செடிகள் மற்றும் வைக்கோல்களை போட்டு விவசாயிகள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஊட்டியில் அதிகபட்சமாக 19.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6.2 டிகிரி செல்சியசும் பதிவாகி இருந்தது. இந்த வெப்ப நிலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பதிவானது.