சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம்.
சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம்.
கோவை நவம்பர் 28-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.
மேலும் அன்னூரில் சிட்கோ அமைப்பதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சிப்காட் அமைப்பதற்கு 6 ஊராட்சி மக்கள், விவசாயிகள், நமது நிலம் நமதே என்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ந் தேதி நமது நிலம் நமதே போராட்ட குழு சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அன்னூர் ஓதிமலை சாலையில் அமைந்துள்ள அண்ணா திடலில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 6 கிராம ஊராட்சி மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டமானது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இந்த பகுதியில் அரசு சிப்காட் அமைப்பதன் மூலம் இங்கு விவசாயம் பாதிக்கப்படும் என்பதை உணர்த்துவதற்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகள் அனைத்தையும் கொண்டு வந்து போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர்.
இதனால் அன்னூரில் பலசரக்கு கடைகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரளமான விவசாயிகள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அரசு இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும். எனவே இங்கு சிப்காட் அமைக்க கூடாது.
அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அரசுக்கு எங்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்கும் விதமாக பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதன்படியே இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறோம் என தெரிவித்தனர்.