செல்போன் மூலம் பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர் உறவினர்களுடன் சேர்ந்து நயமாக பேசி வரவழைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த பெண்.
செல்போன் மூலம் பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர் உறவினர்களுடன் சேர்ந்து நயமாக பேசி வரவழைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த பெண்.
கோவை நவம்பர் 30-
கோவை குனியமுத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேசிய போது அதில் ஒரு வாலிபர் பேசினார்.
இளம்பெண்ணிடம் உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது. நீங்களும் அழகாகதான் இருப்பீர்கள், உங்களை நான் நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதற்கு இளம்பெண் பதில் அளிக்காமல் செல்போன் இணைப்பை துண்டித்தார். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து விடாமல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
தொல்லை தாங்க முடியாமல் தவித்த இளம்பெண் இது குறித்து தனது உறவினர்களிடம் கூறினார். அவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் வாலிபரை மடக்கி பிடிக்க திட்டமிட்டனர்.சம்பவத்தன்று வாலிபர் மீண்டும் இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து இளம்பெண் குனியமுத்தூர் பள்ளி அருகே வந்தால் சந்திக்கலாம் என அந்த வாலிபரிடம் கூறினார். பின்னர் இது குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர்களுடன் இளம்பெண் பள்ளி அருகே சென்று காத்திருந்தார். அவரது உறவினர்கள் அந்த பகுதியில் மறைந்து கொண்டனர். செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட வாலிபர் டிப்டாப் உடையில் சந்திக்க வந்தார்.
அப்போது அங்கு மறைந்துஇருந்த இளம்பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கே.ஜி. சாவடி அருகே உள்ள சந்தை பேட்டையை சேர்ந்த பெயிண்டர் ஜெயன் ( வயது 36)என்பது தெரிய வந்தது. மேலும் அவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பெயிண்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.