கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்.
கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்.
கோவை நவம்பர் 21-
கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் 1600 ஆண்டு கால பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இவற்றிற்கு அருகில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் மற்றும் தனியார் பள்ளி இடையே புதிதாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்க ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது
இந்த தீர்மானத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் பொள்ளாச்சி சாலை அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மின் மயானம் அமையும் பட்சத்தில் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
ஏற்கனவே கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் செல்லும் பஸ்கள் ஒத்தக்கால் மண்டபம் பஸ் நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தில் ஏறி செல்வதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மின் மயானம் நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமையும் பட்சத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே வேறு பகுதியில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அடுத்த கட்டமாக ஊர் முகப்பில் கற்களை கட்டி ஊருக்குள் யாரும் வராமல் தடுப்பதுடன் பொதுமக்களும் மூன்று நாட்கள் வெளியே வராமல் வீடுகளில் கருப்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதற்கிடையே பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் அட்டையை திரும்ப வழங்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.