ஊட்டி தெற்கு சரகத்தில் சிறுத்தை மீட்பு
ஊட்டி தெற்கு சரகத்தில் சிறுத்தை மீட்பு
ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் பகுதியில், தேயிலை தோட்டத்தை ஒட்டி போடப்பட்டு இருந்த வலை கம்பி வேலியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு உடன் விரைந்தனர். கால்நடை மருத்துவர் வந்தவுடன் சிறுத்தைப்புலிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. சிறுத்தை சுயநினைவை இழந்ததையடுத்து, சிறுத்தையை வேலியில் இருந்து விடுவிக்க மருத்துவர் அணுகினார். அப்போது, கிளட்ச் கேபிள் வயரில் சிறுத்தைப்புலி சிக்கியதை காண முடிந்தது. பின்னங்கால்களுக்கு சற்று முன்னால் இடுப்புப் பகுதியை இறுகச் சுற்றியவாறு வயர் காணப்பட்டது. உடனடியாக சிறுத்தையின் மேல் இருந்த வயரை அந்த இடத்திலேயே வெட்டி அகற்றி சிறுத்தையை கூண்டுக்கு மாற்றப்பட்டது.
ரிவர்சல் மருந்து, வலி நிவாரணி மற்றும் மன அழுத்த மாடுலேட்டர் மருந்துகள் கொடுக்கப்பட்டு, சிறுத்தையை விடுவிக்க காட்டுப் பகுதிக்கு கூண்டை எடுத்து செல்லப்பட்டது.
மயக்கம் தெளிந்து சிறுத்தை வெளியே வந்ததும் உறுமியது. ஆனால் பின்னங்கால்கள் (பின் கால்கள் மற்றும் வால் பகுதி) முற்றிலுமாக செயலிழந்துவிட்டதால் சிறுத்தை நிற்க முடியாமல் போனதாகவும், இது கிளட்ச் வயரால் முதுகெலும்பு நரம்புகளில் ஏற்பட்ட சுருக்கக் காயம் காரணமாக இருக்கலாம் என மருத்துவர் அறிந்தார். சிறிது நேரத்தில் சிறுத்தை இறந்தது.
சிறுத்தை மாட்டிய இடத்தில் பரிசோதித்தபோது, அங்கு இருந்த கம்பி வேலியில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது, அங்கு கிளட்ச் வயரை வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வயரில் இந்த சிறுத்தை சிக்கியுள்ளது.
வனவிலங்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.