குன்னூரில் ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டிக்கான லோகோவை அமைச்சர் ராமசந்திரன் அறிமுகம் செய்தார்
*சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் யானை, பொம்மன் அடங்கிய லோகோ கொண்டுவரப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குன்னூர் வி.பி திடலில் தமிழகசுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்தார்.*
ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்பது ஆசிய ஹாக்கி கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச ஹாக்கி போட்டியாகும். இந்த போட்டியில் மொத்தம் ஆறு நாடுகள் பங்கேற்று போட்டியிட இருக்கின்றன.
இந்தியாவின் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி 2023 நடைபெற இருக்கிறது.
இந்த போட்டி 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.
இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழா, கடந்த மாத இறுதியில் டெல்லியில் நடந்தது. தொடர்ந்து சென்னை வந்த கோப்பையை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கடந்த 21ம் தேதி மெரினாவில் அறிமுகம் செய்தார்.
பிறகு, பொம்மன் இலச்சினையை அறிமுகப்படுத்தி, கோப்பையை, ‘பாஸ் தி பால்’ என்ற தலைப்பில், அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்த கோப்பை குன்னூர் வி.பி திடலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கோப்பை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தி எலிபாண்ட் விஸ்பரஸ் ஆவணப்படத்தின் ஆஸ்கார் விருது பட நாயகர்களான பொம்மன் மற்றும் யானையை சிறப்பிக்கும் வகையில் இலச்சினை எனப்படும் லோகோ உருவாக்கப்பட்டு நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீலகிரியில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி குட்டியானை மற்றும் பொம்மன் அடங்கிய லோகோ மற்றும் கோப்பையை
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக, தி எலிபாண்ட் விஸ்பரஸ் ஆவணப்படத்தின் ஆஸ்கார் விருது பட நாயகர்களான பொம்மன், பெள்ளி கவுரவிக்கப்பட்டனர் இவருக்கு குட்டியானை மற்றும் பொம்மன் பெயர் அச்சிடப்பட்ட டீசர்ட் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொம்மன் ஆகியோர் ‘பாஸ் தி பால்’ நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.
பின்பு ஹாக்கி கோப்பை முன்பு மாணவ, மாணவிகள் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.