அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட தொழில்மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையேற்று, பேசும்போது தெரிவித்ததாவது தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை தொழில் அதிபர்களாக மாற்றும் பொருட்டு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகாள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டமாகும். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தொழில்முனைவேர்களாக உருவாக இத்திட்டம் பெறும் பயனுள்ளதாக அமையும். இம்முகாமில் பங்கேற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் தகுதிவாய்ந்த பயன்பெறும் வகையில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் நேரடி வேளாண்மை தவிர்த்து பிற அனைத்து உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த உணவுப்பதப்படுத்தல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடைகள் தைத்தல், ரைஸ்மில், என்ஜினியரிங் தொழில்கள், சிலக் ரீலிங், ஸ்பின்னிங் மில், பவர்லூம், கட்டுமானப் பொருட்கள், மளிகைக்கடை, வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற் பயிற்சிக் கூடம், வாடகை கார், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெஃப்ரிஜரேட்ட்ரக் உள்ளிட்ட எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மொத்த திட்டத் தொகையில் 35% (அதிகபட்சாக ரூ.1.50 கோடி வரை) மானியத் தொகையாக வழங்கப்படும். சொந்த நிதியில் இல்லாமல் வங்கிக் கடன் பெற விருப்பினால், மீதமுள்ள 65% வங்கிக் கடனாகப் பெற உரிய ஆலோசனைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வங்கிக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோர் மட்டுமல்லாது, ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தவும், தொழில் ரீதியாக மேம்படுத்தவும் மானிய உதவி பெறலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. வயது 18 முதல் 55 வயது வயதிற்குள் இருக்க வேண்டும்.
தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
மேலும் www.msmseonline.tn.gov.in/aabcs என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பம் பதிவு ஏற்றம் செய்ய சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின்கீழ் பயன்பெறவும், விண்ணப்பிக்கவும் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்கள் மாவட்ட தொழில் மையத்தை நேரடியாக அணுகி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் குறித்த தகவல்கள் மற்றும் உதவிகள் பெற 89255-33941, 89255-33942 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன், மேலாளர் (கி.தொ.நி) .இரா.வாசுகி, SEEDS மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் .கே.பி.எஸ்.சுகிசிவம், DICCI மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .சி.மாயக்கண்ணன், தருமபுரி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் தலைவர் .வெங்கடேஷ்பாபு, கடகத்தூர் சிட்கோ குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் தலைவர் முனைவர்.சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் .கே.கண்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .வெ.லோகநாதன், சேலம் ACTIV .ஜோதிஸ் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர்கள், SC &ST கூட்டமைப்புகள், MSME தொழில் கூட்டமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்