ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் 15 ஆயிரம் பேர் கண்டு களித்தனர்.
நீலகிரி அக்டோபர் 3-
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பிற துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்படும். கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து சென்றனா்.
கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது சீசன் தொடங்கிய நிலையில், தொடா்ந்து மழை பெய்து வந்ததால் நீலகிரி மாவட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வரவில்லை. தற்போது பள்ளித் தோ்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனா்.
ஊட்டியில் பகலில் வெயிலும், இரவில் நீா்ப்பனியும் என இதமான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்றும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் மத்திய பஸ் நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதைத் தொடா்ந்து, போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ்பார்க், கோத்தகிரி நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, லேம்ஸ்ராக், கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், பர்லியார் பழப்பண்ணை என அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 10,000 சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், நேற்று இது 15,000ஆக அதிகரித்து காணப்பட்டது.