வெள்ளக்கோவிலில் கோயில் பூசாரி கழுத்தை நெரித்து கொலை டிரைவர் கைது
வெள்ளக்கோவிலில் கோயில் பூசாரி கழுத்தை நெரித்து கொலை டிரைவர் கைது.
கோவை அக்டோபர் 5-
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வேள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது51). அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மல்லிகா(45) என்ற மனைவியும், மோகன்ராஜ் (35), சுகன்(16) என 2 மகன்களும் உள்ளனர்.
மல்லிகா வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் பகுதி நேர தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். காலை மாரிமுத்து கோவிலுக்கு சென்று விட்டு, நண்பரை ஒருவரை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி சென்றார். இதையடுத்து மல்லிகாவும் வேலைக்கு சென்று விட்டார்.
மல்லிகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போதும் வீட்டில் கணவர் இல்லை. ஒருவேளை நண்பரை பார்த்து விட்டு வர தாமதமாகி இருக்கும். வந்து விடுவார் என நினைத்தார். ஆனால் இரவு வெகுநேரத்தை கடந்தும் மாரிமுத்து வீட்டிற்கு வரவில்லை.
இதனால் மல்லிகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக தனது கணவரின் செல்போனுக்கு போன் செய்தார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் மாயமானவரை தேடுவதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மாரிமுத்து கடைசியாக நண்பர் ஒருவரை சந்திக்க செல்வதாக கூறி விட்டு சென்றதாக குடும்பத்தினர் கூறினர்.
அவர் யார்? என்பது குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவரான பிரேம்குமார்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் மாரிமுத்துவை கொன்றதை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில், மாரிமுத்துவுக்கும், பிரேம்குமாருக்கும் முன்விரோம் இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக பேசுவதற்காக பிரேம்குமார், மாரிமுத்துவை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரும் அங்கு சென்றார். 2 பேரும் வீட்டில் வைத்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார், மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொன்றார். இதில் அவர் துடிதுடித்து இறந்து போனார். பின்னர் அவரது உடலை தூக்கி சென்று, அக்கரைபாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் கரையோரத்தில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பிரேம்குமாரை அழைத்து கொண்டு அக்கரைபாளையம் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிக்கு சென்றனர்.
அங்கு கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பிரேம்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பிரேம்குமாருக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாரிமுத்துவுக்கு தெரிந்ததும், அதனை எல்லோரிடமும் தெரிவித்ததாகவும்,
இதனால் அவமானம் தாங்க முடியாமல் பிரேம்குமார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரிக்கின்றனர்.