ஊட்டி குந்தா தாலுகாவில் 213 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
ஊட்டி குந்தா தாலுகாவில் 213 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நீலகிரி நவ 17-
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பாலகொலா விளையாட்டு மைதானத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 81 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பின்னர் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
81 பேருக்கு வீட்டு மனைப்பட்டா நீலகிரியில் அனுபோக சான்று ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது விவசாயிகளின் நலன் கருதி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பட்டா வழங்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு திட்டம் மூலம் பட்டா வழங்கப்படுகிறது. பாலகொலாவில் மட்டும் 81 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பேருக்கு முதியோர் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பில் தோட்டக்கலை சார்ந்த மானியத்துடன் கூடிய நுண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
சார்பில், 81 பேருக்கு ரூ.56.70 லட்சம் செலவில் வீட்டுமனை பட்டா, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 பேருக்கு ரூ.37.72 லட்சம் கடனுதவிகள் உள்பட மொத்தம் 213 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் மகாவீர் சித்ரன்,
ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார் பாலகொலா ஊராட்சி தலைவர் கலைசெல்வி , ஊராட்சி செயலர் கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.