மஞ்சூர்குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்.
மஞ்சூர்குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்.
நீலகிரி நவம்பர் 30-
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது.
சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. காட்டெருமைகள் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன.
மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது. கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து நடமாடி வரும் காட்டெருமை தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை விரட்டுவதாக கூறுகின்றனர்.
இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் இருந்து வெளியேறி கடைவீதியில் உலா வருகிறது.
இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த இருதினங்களுக்கு முன் மணிக்கல்மட்டம் பகுதியில் தொழிலாளர்கள் இருவர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர்.
அப்போது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாடு திடீரென தொழிலாளர்களை விரட்ட துவங்கியது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து தேயிலை தோட்டத்தில் இருந்து தலைதெறிக்க தப்பியோடி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மணிக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. திடீரென காட்டெருமை வருவதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக தங்களது வீடுகளை அடைத்து தாழிட்டு கொண்டார்கள்.
சுமார் அரைமணி நேரம் அங்கேயே முகாமிட்ட காட்டெருமை மெதுவாக நகர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதன் பிறகே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தார்கள். இதையடுத்து மஞ்சூர் பகுதியில் சுற்றிவரும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.