ஊட்டி தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் கொட்டி கேரள மாணவர்கள் 11 பேர் காயம்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் கொட்டி கேரள மாணவர்கள் 11 பேர் காயம்.
கோவை நவம்பர் 30-
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர்.
அங்கு இத்தாலியன் பூங்கா பகுதியில் பூத்து குலுங்கிய மலர்களை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த தேன்கூடு களைக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. கேரளாவில் இருந்து வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை தேனீக்கள் கொட்டியது.
இதனால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டனர். அப்போது சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க இத்தாலியன் பூங்கா பகுதியில் இருந்த குட்டையில் குதித்தனர்.
அங்கு தண்ணீரின் குளிர் தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தேனீக்கள் கூட்டம் அங்கிருந்து சென்றது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து 11 பேரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதற்கிடையே தேனீக்கள் இருந்த கூட்டை கலைத்தது யார் என்று தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.