ஊட்டியில் களைகட்டும் பாரம்பரிய சாக்லேட் திருவிழா
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் உதகையில் வாழ்ந்தபோது அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நூற்றாண்டை கடந்தும் நீலகிரி மாவட்டத்தில் ஐரோப்பியர்களின்
உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோம் மேட்
சாக்லேட் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உதகையில் உள்ள
மக்களிடமும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
சாக்லேட் என்றாலே குழந்தைகள் துள்ளிக் குதிப்பார்கள். ஊட்டி ‘ஹோம் மேடு’ சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு அதிகம். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இவற்றை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஆண்டுதோறும் சாக்லேட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் இன்று 14-வது ஆண்டு சாக்லேட் திருவிழா தொடங்கியது.
இந்தியாவின் முதல் சாக்லேட் அருங்காட்சியகமான எம் அண்ட் என் சாக்லேட் நிறுவனம் உதகையில் இன்று (டிச.22) தனது சாக்லேட் திருவிழாவை துவங்கியது. கேரளா, கர்நாடகா, ஹிமாச்சல்பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், காஷ்மீர் உட்பட 28 மாநிலங்களின் பாரம்பரிய உணவு பொருட்களைக் கொண்டு ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சாக்லேட்களை கொண்டு 3 இளம் பெண்களின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை அதிக அளவு கவர்ந்து வருகிறது. அதனுடன் இந்திய வரைபடங்கள், ஐஸ்கிரீம், லாலிபாப் உள்ளிட்ட வடிவங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட், ஜிஞ்சர் பில்லிங் சாக்லேட், பெப்பர் ஹனி சாக்லேட் உட்பட 500 வகையான சாக்லேட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. இந்த நிலையில் உதகையில் இன்று (டிச.22) துவங்கிய இந்த சாக்லேட் திருவிழா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி 10 நாட்கள் நடைபெற உள்ளது.