சூலூரில் திமுக கவுன்சிலர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு.
சூலூரில் திமுக கவுன்சிலர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு.
கோவை டிசம்பர் 1-
கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தி.மு.க.வை சேர்ந்த இவர் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கவுன்சிலராக உள்ளார். நேற்று காலை 11 மணியளவில் ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினரான செந்தில்குமார் இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி திதி காரியத்துக்காக கதிர்நாயக்கன் பாளையத்துக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்பட 22 பவுன் தங்க நகைகள் மற்றும், ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பட்டப்பகலில் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்
மாலை 6 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய ராஜேந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த 2 பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு தி.மு.க. கவுன்சிலரின் வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். மேலும் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.
பட்டப்பகலில் கவுன்சிலர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.