சேலத்தில் புத்தகத் திருவிழா துவங்க உள்ள இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

Spread the love
சேலத்தில் புத்தகத் திருவிழா துவங்க உள்ள இடத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் 20.11.2022 முதல் 30.11.2022 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவினை  அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைக்கவுள்ளதைத் தொடர்ந்து, விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 20.11.2022 முதல் 30.11.2022 வரை புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் வருகின்ற 20.11.2022 அன்று தொடங்கி வைக்க உள்ளார்கள். இவ்விழாவில்  மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
சேலம் புத்தகத்  திருவிழா நாள்தோறும் காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு உள்ளூர் கலை வடிவங்களான நாட்டுப்புற கலை, தெருக்கூத்து, பறை, தப்பு உள்ளிட்டவைகளும் இடம்பெறுகிறது.
இப்புத்தகக் கண்காட்சியில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுவதோடு, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட புத்தக தொகுப்புகளும் இடம்பெறவுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் தினசரி 10,000 அரசு மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகள் இக்கண்காட்சியினை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் ஒரு இலட்சம் பள்ளிக் குழந்தைகள் இக்கண்காட்சியினை பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளை அழைத்து வருவதற்கு ஏதுவாக தேவையான போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் 20 மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டி ஆசிரியர் என்ற அளவில் நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் கண்காட்சி அரங்கிற்கு வருகைபுரிந்து திரும்ப பள்ளிக்கு திரும்பும் வரை அவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில் கண்காணிப்புக் குழு மற்றும் கண்காணிப்பு அறைகளும் அமைக்கப்படுகிறது.
கல்லூரி மாணவ, மாணவியர்களும் பெருமளவில் இப்புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இப்புத்தகக் கண்காட்சியினை பார்வையிடும் வகையில் ஒரு நாள் பணி நாளாக கருதி அனுமதி வழங்கப்படும். மக்கள் பிரதிநிதிகள், பொது இயக்கங்களின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள், புத்தக நாடுநர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
புத்தகக் கண்காட்சி அரங்கத்தின் பின் பகுதியில் உணவக வசதி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியினை பார்வையிட வருகைபுரிபவர்களுக்கு குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகக் கண்காட்சி நடைபெறும் 20.11.2022 முதல் 30.11.2022 வரை அனைத்து நாள்களிலும் அமைதி விமான நிலையம் போல சேலம், புதிய பேருந்து நிலையம் ஒலிப்பான்களுக்குத் தடைசெய்யப்பட்டு அமைதிப் பேருந்து நிலையமாகவும் மற்றும் 4 ரோடு முதல் 5 ரோடு வரையிலான சாலை அமைதி சாலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் புத்தகக் கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  பாலச்சந்தர் உதவி செயற்பொறியாளர் அருள், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பெரியசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கார்த்திகை பிறந்தது கோவை சித்தாபுத்தூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Next post புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் கார்த்திகை மாதம் பிறந்ததை ஒட்டி ஆலங்குடியில் ஐயப்பனுக்கு மாலை அணிய குவிந்த பக்தர்கள்