வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரிப்பு

Spread the love

சென்னை

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இயல்பு நிலை பார்வையாளர்களை கையாண்டுள்ளது.

சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்ட மக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக 2 வருடமாக குழந்தைகளை பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் ஆயுத பூஜை, காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் உயிரியல் பூங்காவுக்கு வழக்கமாக விடுமுறை விடப்படும். தற்போது பண்டிகை கால விடுமுறை என்பதால் அன்று உயிரியல் பூங்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 40 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குனர் கூறியதாவது:-

கடந்த வருடத்திற்கு பிறகு இப்போது பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். பூங்காவிற்கு 3-ந்தேதி 9 ஆயிரம் பேரும், 4-ந்தேதி 13 ஆயிரம் பேரும், 5-ந்தேதி 18 ஆயிரம் பேரும் பார்வையாளர்களாக வருகை புரிந்துள்ளனர்.

சாதாரண நாட்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள்.

பண்டிகை விடுமுறை காலம் என்பதால் தற்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்த்து விட்டு வந்த பார்வையாளர் ஒருவர் கூறுகையில், பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. உயிரினங்கள் குறைந்த அளவில் தான் உள்ளன. பறவைகள் முன்பை போல அதிகளவில் இல்லை.

முதலை, காண்டாமிருகம், நீர் யானை போன்ற மிருகங்களுக்கு சூழ்ந்துள்ள தண்ணீர் மாசு அடைந்து துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது. தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.

இதனால் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் பார்வையாளர்கள் மேலும் அதிகரிப்பார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மோசடி வழக்கை திசை திருப்ப கடத்தியதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது.
Next post புதுவையில் துர்கா பூஜை வடமாநில பெண்கள் சிறப்பு பூஜை